தந்தையார் தெய்வத்திரு. இர. ஆறுமுகம்
தாயார் தெய்வத்திருமதி. ஆ. முத்தம்மாள்
கொண்டான் வழிநின்று குடும்பத்தை ஓம்பி பழிநாணும் பண்பைப் பாசத்தில் கலந்தூட்டி மனைக்கு மாட்சியாய் வாழ்ந்த என் அன்னைக்கும்
திண்ணைப் பள்ளியில் தெளிவாய்ப் பயின்றிட்ட நல்வழி மூதுரை நலம்பயக்கும் சதகங்கள் வாக்கில் மிளிரும் வாழ்வுக்குத் துணைகொள்ளும் உழைப்பில் நம்பிக்கை, ஒளியாத நல்லுள்ளம் நீண்டவழி யானாலும் நேர்வழியே செல்லும் பண்பைப் புகட்டிட்ட பாங்குள்ள தந்தைக்கும் காணிக்கை ஆக்குகிறேன் கழல்பணிந்து இந்நூல்களை!
ஆசிரியரின் நூல்கள்
வள்ளுவர் வலியுறுத்தும் ஊழ் ஓராய்வு (1989)
திருக்குறள் ஆய்வு (1992)
திருக்குறள் ஆய்வு 2 (1994 - தமிழக அரசின் பரிசு பெற்றது)
பெண்மைத் தெய்வமே எழுக (1994 வானொலி நாடகங்கள்)
இதுதான் வள்ளுவம் (2007 - திருக்குறள் ஆய்வு 3)
திருக்குறள் வெற்றி பெற்றதா 2009 (திருக்குறள் ஆய்வு 4)
இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா? (2010 - திருக்குறள் ஆய்வு 5)
திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள் (2016 - திருக்குறள் ஆய்வு 6)
திருவள்ளுவர் இயற்றியதா பாயிரம் (2023 - திருக்குறள் ஆய்வு 7)
திருவள்ளுவர் உண்மையில் அறத்துப்பாலில் பேசுவது என்ன? (அச்சில்)
ஆசிரியரின் புத்தகங்களைப் பற்றி சில சான்றோர்களின் கருத்துக்கள்
திருக்குறள் ஆய்வு
வள்ளுவர் வாக்குக்கு எப்படிப்பொருள் கொள்ள வேண்டும் என்பதைத்திறனாய்வாளர் வகுத்த நெறியோடு பொருள் கொள்வதும், ஒப்பிட்டு அலசி விளக்கிச்செல்வதும் இந்நூல் ஆய்வுக்குரிய தகுதியோடு அமைந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.
திருக்குறள் வெற்றி பெற்றதா?
திருக்குறள் பற்றி வெளிவந்த பல நூல்களில் புலவர் ஆ. இரத்தினம் அவர்களின் நூல் மணிமகுடம் சூட்டத்தக்க தனிச்சிறப்பான நூல், சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும், திருக்குறள் உரைகளையும், அயல்நாட்டு வரலாற்றையும், நவீன நடப்புகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஓர் உயரிய ஆய்வு நூல். நூலாசிரியர்க்கு நம் அனைவர் தம் பாராட்டுகள்.
“திருக்குறள் பற்றி புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. புதிய கோணத்தில் ஆராய வைக்கிறது. திருக்குறளைப் பற்றிய ஒரு புதிய சிந்தனை எழுச்சியை இது உண்டாக்கி இருக்கிறது” என்றால் தவறாகாது.
இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா?
திரு. ஆ. இரத்தினம் வள்ளுவர் முப்பாவை ஆழ்ந்து படித்துள்ளார். முன்னை, பின்னை இன்றைய உரையாசிரியர் உரைகளை உரைத்துப்படித்து கலங்குகிறார், கரைகிறார். பலரைப் புரட்டிப் போட்டுப்புத்துரை காண்கிறார்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர் முப்பாலுக்கான பண்டை உரைகளைக் கண்டு மருண்டே போயினர். மெய்யுரையும் புத்துரையும் காணவே துடித்தனர். அவர்களுள் ஒருவர் ஆ. இரத்தினம். அவர் இன்றையப் படிகள் கடந்து மேற்படி செல்கிறார். முப்பாலுக்கு வரையப்பட்ட உரைகள் சமயம் சார்ந்தவை எனக் கூறிச் சமயத்தைச் சாடுகிறார் இவ்வாசிரியர். இது ஆய்வு நூல் சமயப்பித்தை ஒழித்தால் ஒழிய மெய்யரை காண்பது இயலாது.
முப்பால் என்னும் ஞாயிற்றை மேக மண்டலம் மறைத்துள்ளது. ஞாயிற்றின் ஒளியில் மாற்றம் இல்லை. ஞாயிற்றின் ஒளியை ஆசிரியர் காட்ட முயல்கிறார். விரிந்த ஆராய்ச்சி நிறைந்த தமிழ்ச்சான்றுகள் இன்றைய ஆய்வு நெறி, இவை நிறைந்தது இந்நூல். முப்பால் ஒளியை நோக்கிய நடை. தமிழகம் உணர்ந்து கொள்ள வேண்டும், உயர்ந்து கொள்ள வேண்டும்.
தேடல் உத்தியின் உச்சம்
தமிழறிஞர் ஆ.இரத்தினம் மேலே கூறிய மூவகை உத்திகளையும் பயன்படுத்தியுள்ளார். இந்நூல் மூலம் அவரது தமிழ்ப்புலமையும், திருக்குறளில் அவருக்குள்ள ஆழங்கால்பட்ட பயிற்சியும் புலனாகின்றன. ஆய்வு என்பது அடிவனம் போன்றது; முடிவற்றது. இவ்வாய்வு நூலில் ஏற்கக் கூடிய முடிவுகளும் உள; ஏற்க இயலாதனவும் உள; மேல் ஆராய்ச்சிக்கு வழிவகுப்பனவும் உள.
இவர் சங்க நூல்களிலிருந்தும் பிற நூல்களிலிருந்தும் காட்டும் சான்றாதாரப்பாடல்கள் இவரது பரந்துபட்ட ஆழ்ந்த புலமையைக்காட்டுவதால் இவரது முடிவுகள் மிகுந்த விவாதத்திற்கு உரியன வாயினும், திருக்குறளாய்வில் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்றன.
திருக்குறள் ஆய்வு-2
திருவாளர் ஆ.இரத்தினம் அவர்கள் திருக்குறளிலும் சங்க இலக்கியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களிலும் தெளிந்த புலமையும், சீரிய நோக்கும் ஆய்வுத் திறமும் நடுநின்று உண்மை காணும் செப்பமும் சால்பும் ஒருங்கே வாய்ந்த பெரும்புலவர் ஆவர். இவர்கள் “திருக்குறள் ஆய்வு-2” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஆய்வு நூலினை அணுகியும் நுணுகியும் நோக்கினேன்.
அறத்தாறு, பேரா இயற்கை, ஊராண்மை என்ற முப்பெரும் தலைப்புகளில் சிறந்ததொரு ஆய்வினை நிகழ்த்தி இருத்தல் அனைவராலும் பாராட்டத்தக்கது”. திருக்குறளுக்கு எழுந்த உரைகள், ஆய்வுகள் ஆகிய அனைத்துத்தரவுகளையும் தொகுத்துத்தம் சிந்தனைக்குப் பொருந்தும் கருத்துகளை தக்க ஆதாரங்களோடு வெளியிட்டிருத்தல் புலமை விருந்தாகப் போற்றத்தக்கது.
குறள் கூறும் அடிப்படை சிந்தனையைப்புரிந்து அதற்கு முரணில்லாமல் பொருள் கொள்ளுதலே அறிவுடைமையாக இருக்க முடியும். அந்த வகையில் நூலாசிரியரின் நுண்மான் நுழைபுலம் போற்றுதற்குரியதாகவே இருக்கிறது. புலவர் குழந்தை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், நாவலர் இரா.நெடுஞ்செழியன் ஆகிய பகுத்தறிவாளர்கள் திருக்குறளுக்குத் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். அந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்கது ஆசிரியர் ஆ.இரத்தினம் அவர்களின் நூல்
பெண்மைத் தெய்வமே எழுக! (வானொலி நாடகங்கள்)
“நாடகக்கலை நுட்பமெல்லாம் கைவந்த வல்லாளரான பெரும் புலவர் “ஆ.இரத்தினம்” அவர்களை “நாடகக்கலை வல்லார்” என்று சிறப்பித்துப் பாராட்ட வேண்டும். தமிழகம் நல்ல நாடகாசிரியரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
இதுதான் வள்ளுவம் (திருக்குறள் ஆய்வு-3)
ஆய்வைச்சுழற்றும் ஓர் அறிவு விசையினிலே வள்ளுவம் முழுதும் உழவு செய்கின்றனர். எனவே, வள்ளுவர் நேர்படுவார் இவர்தம் தோளினிலே.
திரு.வி.க, வ.உ.சி, மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், நாமக்கல் கவிஞர், வ.சுப.மாணிக்கனார் போன்றோரின் கருத்துகளை ஒப்பிட்டு விளக்குகிறார் , சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளார் வி.முனுசாமி பரிமேலழகரைச் சாடியது போல் இவரும் பரிமேலழகரின் கருத்துக்களை மறுத்துள்ளார். திருக்குறள் உணர்த்துவது “அவ்வுலக வீடுபேறல்ல இவ்வுலக இன்பமே” என்பதே நூலாசிரியரின் கருத்தாகும். இது ஒரு ஆய்வு நூல், சிறந்த நூல்.
மனித வாழ்வின் முதுகெலும்பான குடும்ப வாழ்வு சீர்திருந்தினால் அறஉணர்வும் அரசு சமூக நிலையும் சீரடையும் என்பதே வள்ளுவர் வகுத்துக் காட்டிய வழி. பக்கம் 306 என முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறார் ஆசிரியர். திருக்குறளுக்கு மரபு வழித்தமிழை ஆழமாகவும் அகலமாகவும் கற்ற பேரறிஞரது ஆய்வுக்களம் தமிழுக்குப்புதுமையும் பொலிவும் கொடுக்கவல்ல நல்வரவு

தினமலர் 15.08.2010, புத்தக மதிப்புரை

தினமலர் 29.11.2020, புத்தக மதிப்புரை

தினமலர் 26.2.2012, புத்தக மதிப்புரை

